சபையைக் கட்டுதல்:
சபையைக் கட்டுதல் என்பது 3 காரியங்களை உள்ளடக்கியது. தேவ வார்த்தையைப் பிரசங்கித்தல், தேவ வார்த்தையைப் போதித்தல் மற்றும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இம்மூன்றின் அடிப்படையில் சபை கட்டப்பட வேண்டும். சபையாக கூடியிருக்கும்போது நம்மையல்ல, பிறரை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சபையை கட்டியெழுப்பும் வரங்களில் சிறந்து விளங்க முயற்சி செய்திட வேண்டும்.
சபையை ஆசீர்வதித்தல்:
தேவ பிள்ளைகள் தேவன் தங்களுக்கு கொடுத்துள்ள திறமைகளை, தாலந்துகளை ஊக்குவித்தல், பரிந்துபேசி ஜெபித்தல், குணமாக்குதல், அற்புதம் செய்தல், இசை மற்றும் கைவினைக் கலைகள் போன்றவற்றை கர்த்தருடைய சபைக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்த வேண்டும். தங்களுக்கு தேவன் கொடுத்துள்ள தாலந்துகள் மற்றும் வரங்களை சபைக்கும், சபை மக்களுக்கும் ஆசீர்வாதமாக பயன்படுத்துவது சபையை ஆசீர்வதிப்பதாகும்.
சபையை நேசித்தல்:
சபையை நேசிக்கிறவர்கள், சபையில் சந்திக்கப்படாத, நிறைவேறாத தேவைகளை அறிந்து, உடனடியாக செயல்படக்கூடிய தீர்மானங்களை எடுத்து விரைவாக மகிழ்ச்சியோடு செயல்பட முன்வந்துவிடுவார்கள். பணிவிடை செய்யும் இருதயம் கொண்டவர்கள் சொல்லாமலேயே பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். எப்பொழுதும் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்கும் ஆவிக்குரிய தன்மை உள்ளவர்கள், தேவ அன்பின் நிரூபனமாக இருந்து செயல்படுவார்கள்.
சபையை அனுப்புதல்
சுவிசேஷத்தைப் பகிர்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். சாதாரண உரையாடல்களைக்கூட சுவிசேஷம் அறிவிக்கும் வாய்ப்பாக மாற்றும் திறன் அவர்களிடம் உண்டு. ஆண்டவரை அறியாத மக்கள் மீது அன்பும், அவர்களை தேவன் பக்கம் திருப்பும் விருப்பமும் கொண்டவர்கள், இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களுக்காக பாரம் உள்ளவர்கள். பிறருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் திறனை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.